செய்திகள்

நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு: 27 பதக்கங்கள் குவித்த பெல்ப்ஸ் அறிவிப்பு

Published On 2016-08-13 18:37 IST   |   Update On 2016-08-13 18:37:00 IST
ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், தான் நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
தனது 15-வது வயதில் 2000-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார் பெல்ப்ஸ். 2004-ம் ஆண்டு நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் ஒலிம்பிக்ஸில் இதுவரை 22 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 27 பதக்கங்களை வென்றுள்ளார்.

31 வயதான அவர் தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 4 தங்கப் பதக்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் தான் போதிய அளவு சாதனை படைத்துவிட்டதால் இந்த ரியோ ஒலிம்பிக் உடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனக்கு புதியதாக பிறந்துள்ள மகன் பூமர் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெல்ப்ஸ் கூறுகையில் ‘‘இன்னும் நான்கு வருடங்கள் காத்திருந்து மற்றொரு ஒலிம்பிக்கில் நான் கலந்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். நீச்சல் போட்டி குறித்து எனது மனதில் என்னென்ன வைத்திருந்தேனோ அனைத்தையும் செய்து விட்டேன். இந்த சாதனையுடன் விடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு 2020 டோக்கியோ ஒலிம்பிக் வரை போட்டியில் தொடர வேண்டும் என விரும்புவதகா சக வீரர் ரியான் லோச்தே கூறியுள்ளார். 

Similar News