செய்திகள்

ஒலிம்பிக் ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் கால்இறுதியில் மோதல்

Published On 2016-08-13 14:38 IST   |   Update On 2016-08-13 14:38:00 IST
ரியோ ஒலிம்பிக் ஆக்கிப் போட்டியில் நாளை நடக்கும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோத உள்ளன.

ரியோ டி ஜெனீரோ:

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று இருந்தது.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜெர்மனியிடம் 1-2 என்ற கணக்கில் தோற்றது. 3-வது போட்டியில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வென்றது. 4-வது போட்டியில் 1-2 என்ற கணக்கில் நெதர்லாந்திடம் தோற்றது.

நேற்றைய கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இந்திய அணி 2 வெற்றி, 1 டிரா, 2 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று அந்த பிரிவில் 4-வது இடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.

ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டினா முதல் 3 இடங்களை பிடித்தும், ‘ஏ’ பிரிவில் பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதல் 4 இடங்களை பிடித்தும் கால்இறுதிக்கு முன்னேறின.  இங்கிலாந்து, பிரேசில் (‘ஏ’ பிரிவு), அயர்லாந்து, கனடா (‘பி’பிரிவு) ஆகியவை வெளியேற்றப்பட்டன.

இந்திய அணி கால்இறுதியில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்கள் ஸ்பெயின்-அர்ஜென்டினா, நெதர்லாந்து- ஆஸ்திரேலியா, ஜெர்மனி- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Similar News