செய்திகள்

ரியோ ஒலிம்பிக் கால்பந்து: பிரேசில் அணிக்கு ஏமாற்றம்

Published On 2016-08-06 09:43 IST   |   Update On 2016-08-06 09:43:00 IST
ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் புகுந்த பிரேசிலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ரியோ ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டி மட்டும் மூன்று நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

5 முறை உலக சாம்பியனான பிரேசில் கால்பந்து அணிக்கு, ஒலிம்பிக் மகுடம் தான் இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நெய்மார் தலைமையிலான பிரேசில் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் புகுந்த பிரேசிலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி வரை இரு அணி வீரர்களும் கோல் ஏதும் போடாமல் (0-0) டிராவில் முடிந்தது. இதே பிரிவில் நடந்த ஈராக்- டென்மார்க் இடையிலான ஆட்டமும் கோல் இன்றி டிரா ஆனது.

மற்ற ஆட்டங்களில் நைஜீரியா 5-4 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், தென்கொரியா 8-0 என்ற கோல் கணக்கில் பிஜியையும், போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும், ஹோண்டுராஸ் 3-2 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவையும் தோற்கடித்தன. மெக்சிகோ-ஜெர்மனி (2-2), சுவீடன்-கொலம்பியா (2-2) அணிகள் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின.

Similar News