செய்திகள்

வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக்

Published On 2016-08-06 04:49 IST   |   Update On 2016-08-06 05:21:00 IST
31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
ரியோ டி ஜெனீரோ:

உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை 4.30 மணியளவில் தொடங்கியது.

தொடக்க விழா கால்பந்து மைதானமான மரக்கானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைப்பெற்று வருகிறது.



தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, மைதானத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில் ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே ஏற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல மல்லுகட்ட ஆயத்தமாகி வருகிறார்கள்.

ஐ,நா. சபை தலைவர் பான் கீ மூன் உட்பட உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டுகளித்து வருகிறார்கள்.


Similar News