சிறப்புக் கட்டுரைகள்

இன்று உலக இட்லி தினம்

Published On 2024-03-30 02:52 GMT   |   Update On 2024-03-30 02:52 GMT
  • ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்து மீண்டவருக்கு கூட முதலில் டாக்டர் சாப்பிட சொல்வது இட்லிதான்.
  • செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, குஷ்பு இட்லி, குட்டி இட்லி என்று பல வகைகள் வந்து விட்டன.

இட்லி....

எத்தனை வகை உணவு இருந்தாலும் மல்லிகை பூ போல் வெண்மை நிறத்தில் ஆவி பறக்க சுடசுட இரண்டு, மூன்று இட்லியை தட்டில் கொண்டு வந்து வைப்பார்கள்.

தொட்டுக்கொள்ள சூடான சாம்பார், தேங்காய் சட்னி, எண்ணெய் கலந்த பொடி...

சாப்பிடும் முன்பே அந்த வாசனை மூக்கில் நுழைந்து சாப்பிட தூண்டும். இட்லியை பிய்த்து சாம்பாரையும் தொட்டு சாப்பிட்டால்...

ஆஹா... பிரமாதம்! உன்னால் மட்டும் எப்படி இப்படி செய்ய முடியுது. உன் கைப்பக்குவத்தை அடிச்சுக்கவே முடியாது என்று இளம் பெண்களின் கையை பிடித்து கணவன் பாராட்டினால் போதும்... முகம் ஜிவ்வென்று சாம்பார் போல் சிவக்கும். அதன் நடுவே இட்லி போலவே பற்கள் பளிச்சிட சிரிப்பாள். அந்த ஒரு நாள் சந்தோசத்துக்கு இந்த ஒன்று போதுமே!

அதெப்படி நம்முடைய உணவு பழக்கத்தில் இந்த இட்லி மட்டும் முடிசூடா மன்னன் போல் காலம் காலமாக இருக்கிறது. எத்தனையோ உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டும்.

ஆனால் தினந்தோறும் இட்லியையே சாப்பிட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை. அதெப்படி?

மிக எளிய உணவு, தயாரிப்பதும் எளிது. அது மட்டுமல்ல வேறு எந்த உணவை சாப்பிட்டாலும் தொண்டைக்கு கீழே சென்றதும் சண்டை நடக்கும். தொண்டைக்குள் புளித்து கொண்டு எரிச்சல் வரலாம்... வயிறு கடமுடா எனலாம். ஆனால் பூ போன்ற மிருதுவான இட்லியை சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

காரணம் அரிசி, உளுந்தை தவிர எண்ணெய், காரம் என்று எந்தவிதமான பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. அது மட்டுமல்ல, நீராவியில் வேக வைப்பது. ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்து மீண்டவருக்கு கூட முதலில் டாக்டர் சாப்பிட சொல்வது இட்லிதான். இந்த உணவு மட்டும் தான் உடலுக்கும் உள்ளத்துக்கும் இதமானது... இனிமையானது.

புழுங்கல் அரிசி 400 கிராம், உளுத்தம்பருப்பு 100 கிராம் என்ற விகிதத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியே ஊறவைத்து, தனித்தனியாக நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் இரண்டையும் கலந்து தேவையான அளவில் உப்பு போட்டு 3 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான். இட்லி மாவு ரெடி.

பின்னர் இட்லி கொப்பரையில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். சூடான, சுவையான இட்லி தயாராகி விடும். அப்புறமென்ன சாப்பிட்டு விடலாம். நம்மூர் உணவில் முக்கிய இடத்தை பிடித்து உணவின் முடிசூடா மன்னனாக இருக்கும் இட்லி பிறந்த இடம் இந்தோனேஷியா என்கிறார்கள்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டை ஒரு இந்து மன்னன் ஆண்டதாகவும், அவனது ஆட்சியில்தான் இந்த உணவு அறிமுகமாகி பரவியது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

காலப்போக்கில் இட்லியிலும் பல வகைகள் வந்து விட்டன. செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, குஷ்பு இட்லி, குட்டி இட்லி என்று பல வகைகள் வந்து விட்டன. சாம்பாருக்குள் இட்லியை மிதக்க விட்டால் சாம்பார் இட்லி, இட்லி மீது பொடியை தூவினால் பொடி இட்லி... இப்படி ஒவ்வொரு பகுதியிலும் உணவின் அரசனாக இருக்கும் இட்லி ஒவ்வொரு பெயரில் தயாராகிறது.

எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிப்பு தட்டாத அம்மா, மனைவி, சகோதரிகள் கைப்பக்குவத்தில் தயாராகும் இந்த இட்லியை பார்த்து பிரிட்டனை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் 'இந்திய உணவான இட்லி சலிப்பு மிக்கது. இதை ஏன் மக்கள் விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று பதிவை போட கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற கதையில் நம்மூர்காரர்களும் வலைத்தளத்தில் வறுத்தெடுத்து விட்டார்கள். உடலுக்கு பாதகம் இல்லாத இட்லியை சாப்பிட்டும், கொண்டாடியும் மகிழ்வோம்.

Tags:    

Similar News