சிறப்புக் கட்டுரைகள்

சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம்

Published On 2022-12-12 08:52 IST   |   Update On 2022-12-12 08:52:00 IST
  • கடவுளை நம்பாதவர்கள் கூட மருத்துவரை நம்புகின்றனர். நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள சுகாதார பாதுகாப்பு அவசியமானது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலக அளவில் ஏறத்தாழ 100 கோடி மக்களால் தங்களுக்கு தேவையான சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவர். மனிதராய் பிறந்த அனைவரும் நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். இருப்பினும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நோய்களை எதிர்கொண்டு தான் வருகிறோம். மக்கள் கோவில்களுக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான நம்பிக்கை வைத்திருப்பது மருத்துவமனைகள் மீது தான்.

கடவுளை நம்பாதவர்கள் கூட மருத்துவரை நம்புகின்றனர். நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள சுகாதார பாதுகாப்பு அவசியமானது. உலகில் சில சுகாதார சீர்கேடுகளால் பல விதமான நோய் தாக்குதலுக்கு ஆளாகிறோம். சுகாதாரம் என்பது நலம் மற்றும் வாழ்வு கருதி சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். மருத்துவ அறிவியலில் வெவ்வேறு நோய்நிலைகளுக்கு குறிப்பிட்ட சுகாதார சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் சுகாதாரம் என்பது பண்பாடு, பாலினம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மாறுபடுகிறது.

சுகாதாரத்தை பேணுவது இன்றியமையாத ஒன்றாகும். சுகாதார பாதுகாப்பு என்பது உடல் மற்றும் மனக்குறைகளை தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சை மூலம் சரி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். நாடுகள், சமூகங்கள் மற்றும் பொருளாதார நிலையை பொருத்து சுகாதார பாதுகாப்பு என்பது மனிதர்களிடையே வேறுபடுகிறது. இதனை தவிர்த்து உலகில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் பொருளாதாரம், சமூக நிலை, பாலினம், சாதி, மதம் வேறுபாடின்றி சமமான சுகாதார பராமரிப்பு கிடைக்க வேண்டும்.

மலிவான, பொறுப்பான, தகுந்த சுகாதாரச் சேவையை உறுதியான தரத்தோடு அளிக்க வேண்டும். இவற்றில் நோயினை தடுத்தல், குணப்படுத்துதல் அனைத்தும் அடங்கும். ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட புதிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு முக்கியமான ஒன்றாகும். ஏழைகள் மற்றும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் நோய்த்தடுப்பு குறித்த விழிப்புணர்வு, சிறந்த மருத்துவம், மருத்துவமனை பராமரிப்பு போன்றவைகளை உள்ளடக்கிய இன்றியமையாத சுகாதார சேவைகளை எவ்வித பாரபட்சமும் இன்றி முழுமையாக வழங்க வேண்டும் என்பது ஐ.நா. சபை கொள்கைகளில் ஒன்றாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலக அளவில் ஏறத்தாழ 100 கோடி மக்களால் தங்களுக்கு தேவையான சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இந்த அவல நிலை நீங்கி பணம் என்பது ஒரு தடையாக இல்லாமல் அனைவருக்கும் மலிவான, தரமான சுகாதார சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை உலக நாடுகளுக்கு வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12-ந் தேதி(இன்று) சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News