இந்தியா

ஊழியர்கள் பற்றாக்குறை- திருப்பதியில் பக்தர்களுக்கு லட்டு விநியோகிப்பதில் சிரமம்

Published On 2022-12-12 11:25 IST   |   Update On 2022-12-12 11:25:00 IST
  • லட்டு தயாரிக்கும் பணியில் 3 ஷிப்ட்டுகளாக 24 மணி நேரமும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • லட்டு வழங்கும் 60 கவுண்டர்களில் 30 கவுண்டர்களில் மட்டுமே ஊழியர்கள் இருந்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 2½ லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக திருப்பதி வந்து இருந்தனர்.

தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகின்றன. ரூ.50 விலையில் பக்தர்களுக்கு தேவையான அளவு லட்டுக்கள் விற்பனை செய்து வந்தனர்.

தயாரிக்கப்படும் லட்டுக்களை கவுண்டர்களுக்கு கொண்டு செல்லும் பணியை தனியார் ஒருவருக்கு தேவஸ்தானம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி இருந்தது. ஒப்பந்ததாரர் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் வாங்காததால் பணியாளர்கள் பாதி பேர் வேலைக்கு வரவில்லை.

மேலும் லட்டு தயாரிக்கும் பணியில் 3 ஷிப்ட்டுகளாக 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களால் ஒரு நாளைக்கு 3.50 முதல் 4 லட்சம் லட்டுகள் வரை மட்டுமே தயாரிக்க முடிகிறது.

இந்த நிலையில் வார விடுமுறையான நேற்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.

பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு லட்டு வாங்க கவுண்டர்கள் முன்பாக குவிந்தனர். லட்டு வழங்கும் 60 கவுண்டர்களில் 30 கவுண்டர்களில் மட்டுமே ஊழியர்கள் இருந்தனர். மீதும் உள்ள 30 கவுண்டர்கள் மூடப்பட்டு இருந்தது.

இதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு லட்டு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு லட்டு வழங்குவது குறித்து முறையான பயிற்சி இல்லாததால் பக்தர்களுக்கு லட்டு வழங்க சிரமப்பட்டனர்.

இதனால் லட்டு கவுண்டர்கள் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து லட்டுக்களை பெற்று சென்றனர்.

பக்தர் ஒருவருக்கு 3 முதல் 4 லட்டுக்கள் வரை மட்டுமே வழங்கப்பட்டது. கூடுதலாக லட்டுக்கள் கேட்டால் இல்லை என ஊழியர்கள் பதில் அளித்தனர். எனவே நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 7 முதல் 7 லட்சம் லட்டுக்கள் தயாரிக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 72,466 பேர் தரிசனம் செய்தனர் 28,123 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.29 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News