இந்தியா

மறைந்த கேசுப் மஹிந்திரா என்றும் நம் நினைவில் இருப்பார்- பிரதமர் மோடி இரங்கல்

Published On 2023-04-12 19:20 GMT   |   Update On 2023-04-12 19:20 GMT
  • மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்தவர் கேசுப் மஹிந்திரா.
  • பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மஹிந்திரா கூட்டணி அமைக்கவும் முக்கிய பங்கு வகித்தார்.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் தலைவருமான கேசுப் மஹிந்திரா (99) இன்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்த கேசுப் மஹிந்திரா, ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் மற்றும் மருத்துவம் என பல்வேறு துறைகளில் மஹிந்திரா குழுமம் களமிறங்க முக்கிய காரணமாக விளங்கினார்.

இதுதவிர வில்லிஸ் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, இண்டர்நேஷனல் ஹார்வெஸ்டர், யுனைடட் டெக்னாலஜிஸ், பிரிட்டிஷ் டெலிகாம் உள்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மஹிந்திரா கூட்டணி அமைக்கவும் முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில், கேசுப் மஹிந்திராவின் மறைவுக்கு பிரதமர் மோடிஇரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கேஷுப் மஹிந்திராவின் மறைவால் வேதனை அடைகிறேன். வணிக உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும், அவரது முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News