இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு - தடயவியல் சோதனை நடத்த வாரணாசி கோர்ட் ஒப்புதல்

Published On 2023-07-21 11:37 GMT   |   Update On 2023-07-21 11:54 GMT
  • மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்தவேண்டும் என வாரணாசி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
  • ஞானவாபி மசூதியில் தடயவியல் சோதனை நடத்த வாரணாசி கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

லக்னோ:

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மதக் கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் வாரணாசி சிவில் கோர்ட்டு, மசூதிக்குள் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனிடையே இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் என்பவர் வாரணாசி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட், இது தொடர்பாக ஞானவாபி மசூதி நிர்வாகத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஞானவாபி மசூதியில் தடயவியல் சோதனை நடத்த வாரணாசி கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது என வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 6 மாதங்களுக்குள் கணக்கெடுப்பு முடிக்கப்படும் என நினைக்கிறேன் என்றார்.

Tags:    

Similar News