இந்தியா

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் - முதல் 3 நாட்கள் ஆன்லைன் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி

Published On 2025-11-19 10:56 IST   |   Update On 2025-11-19 10:56:00 IST
  • வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
  • ஒரு மணி நேரத்திற்கு 4,300 முதல் 4,700 பேர் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட் கவுண்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி தரிசனத்தில் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.

வைகுண்ட துவார தரிசனத்தின் முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

மீதமுள்ள 7 நாட்களுக்கு வைகுண்ட ஏகாதேசி தரிசனத்திற்கான டோக்கன் நேரடியாக வழங்கப்படும் பக்தர்கள் நேரடியாக திருமலையை அடைந்து வைகுண்ட துவார தரிசனம் செய்யலாம்.

இந்த 10 நாட்களில் சுமார் 8 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4,300 முதல் 4,700 பேர் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை முதல் 3 நாட்கள் தரிசனத்திற்கான டோக்கன்களுக்கு பக்தர்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேவஸ்தான வலைத்தளம், மொபைல் செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம். டிசம்பர் 2-ந்தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்வதற்கு முதல் 3 நாட்களில் ஆன்லைன் டோக்கன் இல்லாத பக்தர்கள் திருப்பதி மலைக்கு நேரடியாக வர வேண்டாம் என தெரிவித்தனர்.

திருப்பதி கோவிலில் நேற்று 66,966 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 21.535 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடியாக இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News