இந்தியா

விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது? - போலீசார் கொடுத்த டீயை குடிக்க மறுத்த அகிலேஷ் யாதவ்

Published On 2023-01-09 02:09 IST   |   Update On 2023-01-09 02:09:00 IST
  • உத்தர பிரதேசத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றார்.
  • அவர்கள் கொடுத்த தேநீரை விஷம் வைத்து விடுவார்கள் எனக்கூறி குடிக்க மறுத்துவிட்டார்.

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவராக உள்ள இவரது கட்சியின் டுவிட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் கவனித்து வந்துள்ளார். சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை போலீசார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அவரை விடுவிக்கும்படி கோரி டி.ஜி.பி. தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அகிலேஷ் யாதவ் நேற்று சென்றார். அவருடன் கட்சித் தொண்டர்களும் சென்றுள்ளனர்.

முன்னாள் முதல் மந்திரியான அவருக்கு போலீஸ் அதிகாரிகள் குடிக்க தேநீர் கொடுத்தனர். ஆனால், உங்களுக்கு (தொண்டர்களிடம்) தெரியாது. எனது தேநீரில் அவர்கள் விஷம் வைத்து விடுவார்கள். எனக்கு தேவையான தேநீரை நானே வாங்கி குடித்துக் கொள்வேன். உங்களுக்கான தேநீரை நீங்களே குடியுங்கள் என போலீசாரிடம் கூறினார்.

அதன்பின், காவல் நிலையத்திற்கு வெளியே சென்று தனக்கு தேநீர் வாங்கி வரும்படி கட்சி தொண்டர் ஒருவரிடம் அவர் கூறினார்.

சமாஜ்வாடி கட்சி தொண்டரான மணீஷ் ஜகனை லக்னோ போலீசார் கைது செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. வெட்கக் கேடானது. உடனடியாக அவரை போலீசார் விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News