ஒரு எருமை மாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் இரு மாநில கிராம மக்கள்
- இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
- இருதரப்பினர் கொடுத்த தனித்தனி புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ளது, பொம்மனஹால் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, ஆந்திர மாநிலம் மெட்டஹால் கிராமம். இந்தநிலையில் பொம்மனஹால் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 5 வயது நிரம்பிய எருமையை கிராம தேவதைக்கு பலி கொடுக்க வளர்த்து வந்தார். அந்த எருமை கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. அதனை யாரோ திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
விவசாயி அந்த எருமை மாட்டை தேடி வந்தார். இந்த நிலையில் மெட்டஹால் கிராமத்தில் அந்த மாட்டை விவசாயி கண்டுபிடித்தார். அந்த எருமை மாட்டை அவர் அழைத்து வர முயன்றார். ஆனால் இதற்கு மெட்டஹால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், இந்த எருமை மாடு எங்களுக்கு சொந்தமானது. நாங்கள் அந்த எருமை மாட்டை எங்கள் கிராம தெய்வமான சக்கம்மா தேவி கோவிலுக்கு பலி கொடுக்க வளர்த்து வருவதாகவும், இது அம்மனுக்கு சொந்தமானது என்றும், இதன் தாய் மாடு எங்களிடம் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
ஆனால் அந்த விவசாயி, அந்த மாடு எனக்கு சொந்தமானது. நான் வளர்த்து வந்த மாடு திருடப்பட்டுள்ளது. அது தான் இது. இந்த மாட்டை எங்கள் கிராம காவல் தெய்வத்துக்கு பலியிட நேர்த்திக்கடனாக விட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார். இருப்பினும் மெட்டஹால் கிராம மக்கள் அந்த மாட்டை கொடுக்க மறுத்தனர்.
இதனால் அந்த விவசாயி, தனது கிராம மக்கள் சிலரை அழைத்துக்கொண்டு மெட்டஹால் சென்றுள்ளார். அந்த எருமை மாடு தனக்கு சொந்தமானது என வாதிட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. மேலும் கைகலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் ஆந்திரா மோகா போலீஸ் நிலைய கதவை தட்டியது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த தனித்தனி புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே மாட்டுக்கு இரு கிராமத்தினரும் சொந்தம் கொண்டாடி வருவதால் போலீசாரே இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இதற்கிடையே இரு கிராம மக்களும், அந்த எருமை மாடு யாருக்கு சொந்தமானது என்பதை கண்டறிய அதன் தாய் மூலம் மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொம்மனஹால், மெட்டஹால் கிராமங்களில் ஜனவரி இறுதியில் கிராம தேவதைக்கு திருவிழா நடக்க இருப்பதும், அதில் அந்த எருமை மாட்டை பலியிட முடிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.