இந்தியா

மியான்மருக்கு இளைஞர்களை ஏமாற்றி அனுப்பிய 2 இடைத்தரகர்கள் கைது

Published On 2022-10-06 10:15 GMT   |   Update On 2022-10-06 10:15 GMT
  • தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 பேர் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு இருந்தனர்.
  • மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 2 இடைத்தரகர்களும் நூற்றுக்கணக்கானவர்களை மியான்மர் நாட்டுக்கு ஏமாற்றி அனுப்பி உள்ளனர்.

மும்பை:

மியான்மர் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மியாவாடி என்ற நகரம் மாபியா கும்பல் மற்றும் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கிறது.

அந்த மாபியா கும்பல் பல்வேறு ஆயுதக்குழுக்கள் கொண்டது. அந்த ஆயுத குழுவினர் தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டவர்களை கடத்தி சென்று தங்களது டிஜிட்டல் குற்றங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

அந்த வகையில் அந்த மாபியா கும்பலிடம் சுமார் 300 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக சிக்கி இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. அவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள் என்பதும் அங்கிருந்து பேசியவர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் ஆவார்கள்.

தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 பேர் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு இருந்தனர். அவர்களில் சிலரும் மியான்மருக்கு கடத்தப்பட்டு ஆன்லைன் மோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாபியா கும்பலிடம் இருந்து தங்களை மீட்குமாறு தமிழக இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். முதலில் 32 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அடுத்தகட்டமாக 13 தமிழர்கள் மீட்கப்பட்டு நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மற்றவர்களையும் மீட்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 6 தமிழர்கள் அங்குள்ள ஆயுதக்குழுக்கள் கும்பலிடம் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மியான்மருக்கு கடத்தி செல்லப்படும் இளைஞர்களை இந்தியாவில் சிலர் திட்டமிட்டு ஏமாற்றி அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் நல்ல வேலை இருப்பதாகவும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்றும் ஏமாற்றி அனுப்பி உள்ளனர்.

ஆனால் அங்கு சென்ற பிறகு கிரிப்டோ கரன்சி மூலம் மோசடி செயல்களை செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளனர். மோசடியில் ஈடுபட மறுப்பவர்களை மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்து உள்ளனர். இவை அனைத்தும் மீட்கப்பட்டவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே மீட்கப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் மகாராஷ்டிரத்தில் 2 இடைத்தரகர்கள் சிக்கி உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் டோங்கிரி நகரை சேர்ந்த அந்த 2 இடைத்தரகர்களும் நூற்றுக்கணக்கானவர்களை மியான்மர் நாட்டுக்கு ஏமாற்றி அனுப்பி உள்ளனர். அங்குள்ள ஆயுதக்குழுக்களுடன் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த 2 இடைத்தரகர்களும் நவாஸ்கான், உமர் காதர் என்று தெரிய வந்துள்ளது. அவர்களிடம் மகாராஷ்டிர மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை போல மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் இடைத்தரகர்களை பிடிக்கவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News