திருட வாய்ப்பு: கண்காணிப்பு கேமரா பாதுகாப்புடன் தக்காளி விற்கும் வியாபாரி
- ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- திருடுவதற்காக ஒரு கூட்டம் சுற்றுகிறது.
பெங்களூரு :
நாட்டில் கடந்த சில தினங்களாக தக்காளி பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு தக்காளியின் அதிர வைக்கும் விலை உயர்வு தான் காரணம். ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள், மாதுளை பழங்களுக்கு ஈடாக தக்காளியின் விலையும் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விலை உயர்வால், தக்காளி திருட்டை தடுப்பதற்காக விவசாயி ஒருவர் தனது கடையில் கண்காணிப்பு கேமராவை வைத்த சம்பவம் கர்நாடக மாநிலம் ஹாவேரியில் நடந்துள்ளது.
ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா அக்கிஅலுரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவர் தனது கடையில் தக்காளியை விற்பனை செய்கிறார். இந்த நிலையில் விலை உயர்வால் சில இடங்களில் தக்காளிகள் திருடப்படுவதால் பயந்துபோன கிருஷ்ணப்பா, தனது கடையில் தக்காளி திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா ஒன்றை வைத்துள்ளார். சாலையோர கடையில் தக்காளி பெட்டியில் கண்காணிப்பு கேமராவை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது தக்காளி விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், அத்தியாவசிய பொருள் என்பதால் அதை வாங்க வேண்டி உள்ளது. இதனால் அவற்றை திருடுவதற்காக ஒரு கூட்டம் சுற்றுகிறது. மேலும் கூடுதல் தக்காளி கொடுக்குமாறு வாடிக்கையாளர்கள் தகராறு செய்கிறார்கள். கண்காணிப்பு கேமரா இருந்ததால் இதுபோன்ற பிரச்சினையால் எந்த பாதிப்பும் இருக்காது என்றார்.