இந்தியா

பாகிஸ்தானுடனான 4 நாள் சண்டையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு

Published On 2025-05-18 10:59 IST   |   Update On 2025-05-18 10:59:00 IST
  • பாதுகாப்பு ஒத்திகை செலவு என கணக்கிட்டால் நிதிச்செலவினம் கடுமையாக இருக்கும் என வல்லுநா்கள் மதிப்பிடுகின்றனா்.
  • இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது.

புதுடெல்லி:

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

பாகிஸ்தானுடனான 4 நாள் சண்டையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 7-9 தேதிகளில் நடந்த தாக்குதல்கள், அதையொட்டி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மட்டும் தினமும் ரூ.1460 கோடி முதல் ரூ.5000 கோடி வரை செலவானது. அந்த வகையில் 4 நாள் செலவு ரூ. 15,000 கோடி வரை ஆனதாக பாதுகாப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. கப்பலில் இருந்து தரைப் பகுதியில் இலக்கைத் தாக்கக்கூடிய இந்திய தயாரிப்பு பிரமோஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்ட செலவினமும் இதில் அடங்கும்.

எல்-70 ரக விமான எதிா்ப்பு சிறிய வகை நவீன பீரங்கி, இசட்யு 23 எம்எம் பீரங்கிகள், எஸ்-400 அம்சங்களைக் கொண்ட 'சில்கா' ரகவான் பாதுகாப்பு சாதனங்கள் போன்றவற்றை பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தியதாக இந்திய பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

சண்டையில் தலா ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ரஷிய தயாரிப்பு வெடிமருந்து டிரோன்களும் (காமிகேஸ்) நூற்றுக்கணக்கில் பயன் படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர போா் விமானங்களை இயக்கும் செலவு, தளவாடங்கள், துருப்புக்களின் நடமாட்டம், மீட்பு நடவடிக்கைகள், போா் மற்றும் பாதுகாப்பு ஒத்திகை செலவு என கணக்கிட்டால் நிதிச்செலவினம் கடுமையாக இருக்கும் என வல்லுநா்கள் மதிப்பிடுகின்றனா்.

Tags:    

Similar News