இந்தியா

பீகார் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.30,000.. கடைசி நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தேஜஸ்வி

Published On 2025-11-04 23:50 IST   |   Update On 2025-11-04 23:50:00 IST
  • மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 அன்று ரூ.30,000 ஒரே தவணையாக வழங்கப்படும்.
  • முன்னதாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தேஜஸ்வி அறிவித்திருந்தார்.

பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும் கண்கவர் திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் பேசுகையில், 'மை பஹின் மான் யோஜனா' என்ற திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 அன்று ரூ.30,000 ஒரே தவணையாக வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், கோதுமைக்கு 400 ரூபாயும் போனஸ் தொகையாக வழங்கப்படும். பாசனத்துக்காக இலவச மின்சாரம் வழங்கப்படும்.

விவசாயிகளுக்குஅனைத்து முதன்மை விவசாய கடன் சங்கங்கள், முதன்மை சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களுக்கும் மாநிலத்தில் மக்கள் பிரதிநிதிகள் அந்தஸ்து வழங்கப்படும்.

ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து 70 கி.மீ.க்குள் இடமாற்றங்கள் செய்யப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்" என்று வாக்குறுதி அளித்தார்.

முன்னதாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தேஜஸ்வி அறிவித்திருந்தார்.

இதற்கிடையே ஆளும் என்டிஏ கூட்டணி 'முக்கியமந்திரி மகிளா ரோஸ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் கணக்குகளில் ஏற்கனவே ரூ.10,000 டெபாசிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News