இந்தியா

வீடு கட்டி தருவதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் ரூ.900 கோடி மோசடி

Published On 2022-12-03 11:23 GMT   |   Update On 2022-12-03 11:23 GMT
  • கடந்த 2 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும் இல்லை பணம் கட்டியவர்களுக்கு குடியிருப்பு எங்கு உள்ளது என காட்டவும் இல்லை.
  • போலீசார் லட்சுமி நாராயணா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் குண்டூர் மங்கள கிரியை சேர்ந்தவர் லட்சமிநாராயணா. இவர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தார்.

இவர் கடந்த 2020-ம் ஆண்டு 23 ஏக்கர் பரப்பளவில் ரூ 38 கோடியில் 10 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக அறிவித்தார்.

3 படுக்கை அறைகள் கொண்ட வீடு சதுர அடி ரூ 500-க்கு விற்பனை செய்துவருவதாகவும், முன்பணம் செலுத்துபவர்களுக்கு சலுகை விலையில் சதுர அடி ரூ.300-க்கு வழங்கப்படடும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இதனை நம்பி 2,500 பேர் ரூ.900 கோடி லட்சுமி நாராயணாவிடம் முன்பணமாக செலுத்தினர். கடந்த 2 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும் இல்லை பணம் கட்டியவர்களுக்கு குடியிருப்பு எங்கு உள்ளது என காட்டவும் இல்லை.

இதனால் பணம் கட்டியவர்கள் ஐதராபாத்தில் உள்ள டவுன் பிளானிங் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். லட்சுமி நாராயணாவுக்கு ஐதராபாத் அருகே 23 ஏக்கர் நிலம் எதுவும் இல்லை. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லட்சுமி நாராயணா எந்த அனுமதியும் பெறவில்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து பணம் கட்டியவர்கள் லட்சுமி நாராயணாவை அணுகி எங்களுக்கு வீடு தேவையில்லை, நாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தர வேண்டும் என கேட்டனர்.

பணம் கேட்டவர்களுக்கு லட்சுமி நாராயணா காசோலை வழங்கினார். காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.

பணம் கட்டி ஏமாந்தவர்கள் இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் லட்சுமி நாராயணா ரூ.900 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லட்சுமி நாராயணா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்ததால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பதவியை லட்சுமி நாராயணா நேற்று ராஜினாமா செய்தார்.

Similar News