இந்தியா

தெலுங்கானாவில் உதவி கலெக்டரை கடித்து குதறிய தெருநாய்கள்- அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

Published On 2023-04-04 04:26 GMT   |   Update On 2023-04-04 04:26 GMT
  • தெருநாய்கள் கடித்ததில் கலெக்டரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
  • தெலுங்கானாவில் தெருநாய்கள் பொதுமக்களை அடிக்கடி கடித்து குதறும் சம்பவம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலத்தில் நாய் தொல்லை அடிக்கடி அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் நாய்களைக் கண்டாலே பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்கள் அவழியாக நடந்து செல்வோரையும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரையும் துரத்தி துரத்தி கடிப்பதால் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மாதம் தந்தையுடன் பொருட்களை வாங்க ஷாப்பிங் மாலுக்கு சென்ற போது 6 வயது சிறுவனை சாலையில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தெலுங்கானா கூடுதல் கலெக்டர் ஒருவரையும் தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளது. சித்திபேட்டை உதவி கலெக்டர் சீனிவாச ரெட்டி இவர் அலுவலகத்திற்கு காரில் சென்றார். காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடந்து சென்ற போது அங்கிருந்த தெருநாய்கள் சீனிவாச ரெட்டியை துரத்தி துரத்தி காலில் கடித்தது.

இதனைக் கண்ட கலெக்டரின் உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெருநாய்களை விரட்டி அடித்தனர்.தெருநாய்கள் கடித்ததில் கலெக்டரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சித்திபேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் ஊழியர்கள் 2 பேரை கடித்தது.

தெலுங்கானாவில் தெருநாய்கள் பொதுமக்களை அடிக்கடி கடித்து குதறும் சம்பவம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News