இந்தியா

கூலிப்படைக்கு ரூ.8 லட்சம் கொடுத்து மகனை கொலை செய்த தலைமை ஆசிரியர்

Published On 2022-11-02 05:47 GMT   |   Update On 2022-11-02 05:47 GMT
  • மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை பெற்றோரே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ராம் சிங் அவரது மனைவி ராணி பாய் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கம்மத் கிராமத்தை சேர்ந்தவர் ராம் சிங். மரி பெடா பங்களா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி ராணி பாய். மகள் அமெரிக்காவில் குடியேறி உள்ளார். இவர்களது மகன் சாய்ராம் (வயது 26). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்தார். அவரது பெற்றோரிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டார்.

அவர்கள் தர மறுத்த போது தாய் தந்தை என்று கூட பார்க்காமல் தினந்தோறும் அடித்து துன்புறுத்தினார்.

மகனை எப்படியாவது திருத்தி நல்வாழ்வுக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய ராம் சிங், சாய்ராமை ஐதராபாத்தில் உள்ள ஒரு மன நல சிகிச்சை மையத்தில் சேர்த்தார். ஆனால் சாய்ராம் அங்கு சிகிச்சை பெறாமல் வீடு திரும்பினார்.

அங்கிருந்து வந்த பிறகு சாய்ராமின் கோர தாண்டவம் அதிகரித்தது. இரவு நேரங்களில் மது குடிக்க பணம் கேட்டு தாய் தந்தையை தொடர்ந்து தாக்கினார். இதனால் மனமுடைந்து போன ராம் சிங்கும் அவரது மனைவியும் மகன் என்று கூட பார்க்காமல் அவனை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

இதுகுறித்து ராணி பாய் அவரது சகோதரர் சத்ய நாராயணா என்பவரிடம் கூறினார்.

அவர் கூலிப்படையை சேர்ந்த ரவி, தர்மா, நாகராஜ், ராம்பாபு ஆகியோரிடம் சாய்ராமை கொலை செய்ய பேரம் பேசினார். அவர்கள் ரூ.8 லட்சம் பணம் கேட்டனர்.

அவர்களிடம் ராம் சிங் முன்பணமாக ரூ.1.5 லட்சம் கொடுத்தார். கொலை நடந்த பிறகு ரூ.6.5 லட்சத்தை தருவதாக ஒப்புக்கொண்டனர்.

கடந்த 18-ந் தேதி சத்யநாராயணா கூலிப்படையுடன் வந்தார். சாய்ராமை மது குடிக்க அழைத்தார். மாமா தான் கூப்பிடுகிறார் என்று சாய்ராம் அவருடன் சென்றார்.

ராம் சிங்கின் காரில் கூலிப்படையினர் சாய்ராமை அழைத்துச் சென்றனர். கல்லேபள்ளி என்ற இடத்தில் வைத்து மது குடித்தனர்.

போதையில் சரிந்த சாய்ராமை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். அங்குள்ள வனப்பகுதியில் அவரது உடலை வீசிவிட்டு திரும்பி வந்து விட்டனர். சாய்ராமை கொலை செய்து வீசியது குறித்து சத்யநாராயணா அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சாய்ராம் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் கம்மத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சாய்ராமை 5 பேர் கும்பல் காரில் அழைத்து வந்தது பதிவாகி இருந்தது.

அதில் உள்ள கார் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே ராம் சிங் தனது மகனை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்தார். ஆஸ்பத்திரியில் இருந்த சாய்ராம் உடலை அடையாளம் காண்பதற்காக ராம் சிங் மற்றும் ராணி பாயை அழைத்தனர்.

அவர்கள் காரில் வந்து ஆஸ்பத்திரியில் இருந்த உடலை பார்வையிட்டனர்.

அவர்கள் வந்த காரை பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான அதே கார் இங்கே வந்திருப்பதை அறிந்த போலீசார் ராம் சிங் மற்றும் ராணிபாயிடம் விசாரணை நடத்தினர். இதில் மது குடிக்க பணம் கொடுக்காததால் அடித்துக் கொடுமை செய்த மகனை கூலிப்படை மூலம் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ராம் சிங் அவரது மனைவி ராணி பாய் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர். கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை பெற்றோரே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News