இந்தியா

போலி வருமானவரித்துறையினர் சோதனை செய்த வீடு மற்றும் வீட்டில் சிதறி கிடந்த பொருட்கள்.

ஆந்திர தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.50 லட்சம், 50 பவுன் நகை கொள்ளை

Published On 2023-02-25 05:18 GMT   |   Update On 2023-02-25 05:18 GMT
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சோதனைக்கு வந்தவர்கள் போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என்பதை உறுதி செய்தனர்.
  • வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், பழைய குண்டூர், பிரகதி நகரை சேர்ந்தவர் எர்ரம் செட்டி கல்யாணி. தொழிலதிபரான இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் 3 நபர்கள் டிப் டாப் உடை அணிந்து காரில் வந்தனர்.

அவர்கள் கல்யாணி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டனர். பின்னர் கல்யாணி வீட்டில் இருந்தவர்களிடம் வருமான வரித்துறையில் இருந்து வருகிறோம்.

உங்கள் வீட்டில் ஏராளமான நகை பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

உங்கள் வீட்டில் சோதனை செய்வதற்காக வந்துள்ளோம் எனக் கூறி ஒவ்வொரு அறையாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் இருந்த ஏராளமான சொத்து ஆவணங்கள் மற்றும் ரூ.50 லட்சம் பணம், 50 பவுன் தங்க நகைகளள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகை பணத்திற்கு உண்டான ஆவணங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து பொருட்களை மீட்டு செல்லுமாறு தெரிவித்துவிட்டு அவசர அவசரமாக காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

சோதனைக்கு வந்தவர்கள் போலி வருமானவரித்துறை அதிகாரிகள் என தாமதமாக உணர்ந்த கல்யாணி இதுகுறித்து குண்டூர் பழைய போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சோதனைக்கு வந்தவர்கள் போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என்பதை உறுதி செய்தனர்.

மேலும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்கையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதனால் சோதனைக்கு வந்து சென்ற மர்மநபர்கள் யார் என கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சினிமா பாணியில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் வழக்கு பதிவு செய்து கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News