இந்தியா

ஆயுர்வேத டாக்டரிடம் ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை- இளம்பெண்ணுக்கு வலைவீச்சு

Published On 2022-12-13 06:26 GMT   |   Update On 2022-12-13 06:26 GMT
  • இளம்பெண் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வாங்கி வந்ததாக கூறி டாக்டரிடம் லட்டை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது.
  • லட்டு சாப்பிட்ட சில நிமிடங்களில் டாக்டர் மயங்கிவிட்டார்.

திருப்பதி:

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆயுர்வேத டாக்டர். இவர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்வதற்காக பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பஸ்சில் அவருக்கு அருகில் அமர்ந்து பயணித்த இளம்பெண் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இதன் மூலம் இளம்பெண்ணுடன் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து அந்த பெண் லாட்ஜூக்கு செல்லலாமா? என அழைத்துள்ளார். இதையடுத்து டாக்டரை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு லாட்ஜூக்கு இளம்பெண் அழைத்து சென்றார்.

அப்போது அந்த இளம்பெண் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வாங்கி வந்ததாக கூறி டாக்டரிடம் லட்டை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது. இதனால் லட்டு சாப்பிட்ட சில நிமிடங்களில் டாக்டர் மயங்கிவிட்டார்.

மயக்கம் தெளிந்து எழுந்தபோது, அவரிடம் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு இளம்பெண் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து டாக்டர் ஸ்ரீகாளஹஸ்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட லாட்ஜூல் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த இளம்பெண் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் நகைகளை கொள்ளையடித்து தப்பிய பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News