தேர்தல் என்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் 2024-ல் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள்- நிர்மலா சீதாராமன்
- கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் இன்று நாம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறோம்.
- இந்தியா தனது எதிர்கால வளர்ச்சியை பற்றி நம்பிக்கையுடனும், நேர்மறையாகவும் இருக்கும் ஒரு அரிய நிலையில் உள்ளது.
புதுடெல்லி:
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேசினார். அதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.
பின்னர் மாலை உள்துறை மந்திரி விவாதத்தில் பங்கேற்று பேசினார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று 3-வது நாளாக பாராளுமன்ற மக்களவையில் நடந்தது.
இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவை உலகின் ஐந்து பலவீனமான பொருளாதாரங்கள் பட்டியலில் மோர்கன் ஸ்டான்லி சேர்த்தது. இந்தியா பலவீனமான பொருளாதாரமாக அறிவிக்கப்பட்டது. இன்று அதே மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்தியாவுக்கு அதிக மதிப்பீட்டை வழங்கி உள்ளது. 9 ஆண்டுகள் பா.ஜனதா அரசாங்கத்தின் கொள்கைகளால் பொருளாதாரம் உயர்ந்து வளர்ச்சியை கண்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் இன்று நாம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறோம்.
இந்தியா தனது எதிர்கால வளர்ச்சியை பற்றி நம்பிக்கையுடனும், நேர்மறையாகவும் இருக்கும் ஒரு அரிய நிலையில் உள்ளது. இன்று உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் காலம். அதிகரித்து வரும் பணவீக்கத்தால் வளர்ச்சி குறைகிறது.
இதனால் வெளிநாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் அறிக்கைகள் தந்து வருகின்றன.
2023-24ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. முந்தைய அரசாங்கம் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கின. அவைகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். முந்தைய அரசாங்கம் செய்த தவறுகளை மோடி அரசு சரி செய்துள்ளது.
மாற்றம் என்பது பேசும் வார்த்தைகளாக அல்ல. உண்மையான செயல்கள் மூலம்தான் வரும். நீங்கள் மக்களுக்கு கனவுகளை காட்டுகிறீர்கள். அவர்களின் கனவுகளை நாங்கள் நனவாக்குகிறோம். எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது திட்டங்களை மட்டுமே தொடங்கி வைத்தனர். அவைகளை முறையாக செயல்படுத்தவில்லை.
2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக மக்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் (தேர்தல்) கொண்டு வந்து அவர்களை தோற்கடித்தனர். 2024-ம் ஆண்டிலும் இதே நிலைதான் அவர்களுக்கு ஏற்படும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து போராடுகிறார்களா? அல்லது ஒன்றாக சண்டையிடுகிறார்களா? என்பதை புரிந்து கொள்வது கடினம்.
எதிர்க்கட்சிகளின் மோசடிகளால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மோடி அரசாங்கம் மீட்டு கொண்டு வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழல் உள்ளிட்டவற்றால் முழு தசாப்தத்தை வீணடித்தது. இன்று ஒவ்வொரு நெருக்கடியும், துன்பமும் சீர்திருத்தமாகவும் வாய்ப்பாகவும் மாற்றப்பட்டுள்ளது.
வங்கித்துறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பல நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசியல் தலையீடு இல்லாமல் வங்கிகள் செயல்படுகின்றன. தொழில் நேர்மையுடன் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.