இந்தியா

சீனாவிடம் இருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு.. நியூஸ்க்ளிக் நிறுவனர் கைது!

Published On 2023-10-03 16:26 GMT   |   Update On 2023-10-03 16:26 GMT
  • சோதனை நிறைவடைந்ததை அடுத்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
  • ஆசிரியர் பிரபீர் புர்கயாஸ்தாவை டெல்லி காவல் துறை கைது செய்தது.

இணையதள ஊடக நிறுவனமான நியூஸ்க்ளிக் அலுவலகங்களில் காவல் துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 2009ல் தொடங்கப்பட்ட நியூஸ்க்ளிக், பிபிகே நியூஸ் க்ளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்நிறுவனம் பிரபீர் புர்கயாஸ்தா என்பவரால் நிறுவப்பட்டது.

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சீனாவிடமிருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையின் சிறப்பு பிரிவின் மூலம் நியூஸ்க்ளிக் அலுவலகம், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகள் என 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நிறைவடைந்ததை அடுத்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பிரபல செய்தி நிறுவனத்தில் சோதனை செய்தது, அதன் அலுவலகத்திற்கு சீல் வைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், நியூஸ்க்ளிக் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கயாஸ்தாவை டெல்லி காவல் துறை கைது செய்துள்ளது. இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News