இந்தியா

நீண்ட நாட்களுக்கு இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் கர்நாடகாவில் புதிய வகை வைரஸ் பரவல்

Published On 2023-03-06 04:20 GMT   |   Update On 2023-03-06 04:20 GMT
  • பெங்களூருவில் புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
  • வைரசின் தாக்கம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பெங்களூரு:

இந்தியாவில் 'எச்3.என்.2' என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வைரசின் முக்கிய அறிகுறிகள் ஒன்று, நீண்ட நாட்களுக்கு இருமல் இருக்கும் என்று சொல்கிறார்கள். அத்துடன் காய்ச்சலும் இருக்கும்.

'எச்3.என்2.' வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகத்திலும் இந்த வைரசின் பரவல் அதிகரித்து உள்ளது.

பெங்களூருவில் இந்த புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வைரசின் தாக்கம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று கர்நாடகத்தில் 95 பேருக்கும், அதில் பெங்களூரு நகரில் மட்டும் 79 பேருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாட்களுக்கு பிறகு பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இது அரசுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 291 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

'எச்3.என்2.' வைரஸ் மற்றும் கொரோனா பரவலை தடுப்பது குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இது குறித்து கர்நாடக அரசு சுகாதரத்துறை சார்பாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News