இந்தியா

காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் பிடிபட்டனர்

Published On 2023-08-19 15:27 IST   |   Update On 2023-08-19 15:27:00 IST
  • ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
  • பயங்கரவாதிகள் பிடிபட்டதால் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் பகுதியில் பயங்கரவாதிகளின் செயல்பாடு அதிகரிப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.

இதையடுத்து இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து மச்சால் செக்டார் பகுதி மற்றும் உரி மற்றும் பாரமுல்லா பகுதிகளில் தனித்தனி குழுவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உரியின் சுருண்டா பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான நபர் அப்பகுதியில் சுற்றித் திரிந்தார். போலீசார், ராணுவத்தினரை பார்த்தவுடன் சந்தேகமடைந்த அவர் ஓடத் தொடங்கினார்.

வீரர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து 2 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள் அஹ்மத் டின் மற்றும் முகமது சதீக் கட்டானா ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடம் இருந்து 2 கையெறி குண்டுகள், ஒரு சீனத் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல பாரமுல்லா பகுதியில் தார்சூ சோபோரைச் சேர்ந்த அக்தர் பட், சுருண்டா ஊரியைச் சேர்ந்த முகமது அஸ்லம் கட்டானா, ஜப்லா ஊரியைச் சேர்ந்த முனீர் அகமது, கிராங்சிவனைச் சேர்ந்த முதாசிர் யூசுப் கோக்னோ மற்றும் ஹர்துஷிவாவைச் சேர்ந்த பிலால் அகமது தர் ஆகிய 5 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் இருந்து 4 கையெறி குண்டுகள், 2 கைத்துப்பாக்கிகள், 2 மெகசின்கள், 10 தோட்டாக்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 8 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா சட்டம்) மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எஸ்.எஸ்.பி. அமோத் நாக்புரே கூறுகையில், பிடிபட்ட பயங்கரவாதிகள் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்றார். தகுந்த நேரத்தில் பயங்கரவாதிகள் பிடிபட்டதால் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே ஜம்மு-காஷ்மீரின் ரீசி மாவட்டம் தகிகோட் பகுதியில் குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த பயங்கரவாதியின் உடலை பாதுகாப்பு படையினர் நேற்று மீட்டனர். இதுபற்றி ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை தலைவர் முகேஷ் சிங் கூறுகையில், குந்த கவாஸ் பகுதியில் கடந்த 5-ந்தேதி பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றிருவர் காயங்களுடன் தப்பினார். அவரை தேடி வந்தோம். தற்போது மீட்கப்பட்டது அவரது உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த உடல் கிடந்த பகுதியில் இருந்து 2 கயெறி குண்டுகள், 2 ஏ.கே. ரக துப்பாக்கி தோட்டா தொகுப்பு, 32 கைத்துப்பாக்கி தோட்டாகள் கைப்பற்றப்பட்டன என்றார்.

Tags:    

Similar News