இந்தியா

பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறினால் நிதிஷ்குமார் அரசை ஆதரிக்க தயார்- லாலு கட்சி அறிவிப்பு

Published On 2022-08-09 05:35 GMT   |   Update On 2022-08-09 07:54 GMT
  • பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவதில் எங்கள் கட்சி உறுதியாக உள்ளது.
  • காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்களும் உள்ளன.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கட்சிகள் இடையே மோதல் முற்றி உள்ள நிலையில் பா.ஜனதாவுடனான உறவை கைவிட்டால் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி தெரிவித்துள்ளது.

பீகார் சட்ட சபையில் லாலுபிரசாத்துக்கு 80 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனாலும் அங்கு லாலுவின் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 77 இடங்களை பெற்ற பா.ஜனதா கட்சியின் ஆதரவுடன் 45 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்ட நிதிஷ்குமார் ஆட்சியை பிடித்தார்.

அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்களும் உள்ளன. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பது தொடர்பாக லாலு கட்சியின் துணை தலைவர் சிவானந்த் திவாரி கூறியதாவது:-

பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் தனித்தனியாக தங்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதன் மூலம் அந்த கட்சிகளுக்குள் மோதல் இருப்பது தெரிகிறது. பா.ஜனதா கட்சியுடனான உறவை நிதிஷ்குமார் கைவிட்டால் அவரது கட்சியுடன் கூட்டணி அமைக்க ராஷ்டீரிய ஜனதா தளம் தயாராக உள்ளது.

பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவதில் எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எங்களுடன் இணைந்து பா.ஜனதாவுக்கு எதிராக போராட முன் வந்தால் அவரை ஏற்றுக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் 12 எம்.எல்.ஏ.க்களை கொண்ட மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சியும் ஐக்கிய ஜனதா தளத்தை ஆதரிக்க தயார் என்று தெரிவித்துள்ளது. தற்போது மோதல் நீடித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் பா.ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்து ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News