இந்தியா

இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published On 2024-02-25 10:37 IST   |   Update On 2024-02-25 11:26:00 IST
  • இந்தியாவிலேயே மிக நீண்ட கேபிள் பாலமாகும்.
  • பாலம் தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் செயல்படும்.

காந்திநகர்:

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார்.

இன்று காலை அவர் பெய்ட் துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடி காலை 8.30 மணியளவில் ஒகா பெருநிலப் பகுதியையும், பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட கேபிள் பாலத்தை திறந்து வைத்தார்.

இது இந்தியாவிலேயே மிக நீண்ட கேபிள் பாலமாகும். 2.32 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் சுதர்சன சேது பாலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாலத்தில் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை உள்ளது. நடைபாதையின் மேல் பகுதிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு ஒரு மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த பாலம் போக்கு வரத்தை எளிதாக்குகிறது. துவாரகா மற்றும் பெய்ட் துவாரகா இடையே பயணிக்கும் பக்தர்களின் நேரத்தை கணிசமாக குறைக்கும். பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பக்தர்கள் பெய்ட் துவாரகா செல்ல படகு போக்கு வரத்தை நம்ப வேண்டியிருந்தது. இந்த பாலம் தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் செயல்படும்.

4 வழிச்சாலை கொண்ட 27.20 மீட்டர் அகலம் உள்ள பாலத்தில் ஒவ்வொரு 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன.

இந்த பாலத்துக்கு மோடி 2017 அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டினார். இது பழைய மற்றும் புதிய துவாரகாவை இணைக்கும் என்று அவர் கூறி இருந்தார். இந்த பாலத்தை இன்று அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி துவாரகாவில் ரூ.4,150 கோடிக்கு அதிகமான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாலை 3.30 மணியளவில் மோடி ராஜ்கோட் செல்கிறார். ராஜ்கோட், பகின்டா, ரேபரேலி, கல்யாணி மற்றும் மங்களகிரி ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மாலை 4.30 மணிக்கு ராஜ்கோட்டில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தை ரூ.48,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

Tags:    

Similar News