இந்தியா

சித்தூர் அருகே டிரான்ஸ்பார்மரில் சிக்கி யானை பலி

Published On 2022-12-04 10:02 IST   |   Update On 2022-12-04 10:02:00 IST
  • யானைகள் கூட்டம் மொகிலிவாரி பள்ளி கிராமத்திற்கு புகுந்து அங்குள்ள பயிர்களை நாசம் செய்தது.
  • யானையின் தந்தம் மின்சார ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கியது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பாங்குராபாலம் அடுத்த மொகிலிவாரிப்பள்ளி ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

வனப்பகுதியில் இருந்து இரை தேடி வெளியே வரும் யானைகள் கூட்டம் அடிக்கடி மொகிலிவாரி பள்ளி கிராமத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் கூட்டம் மொகிலிவாரி பள்ளி கிராமத்திற்கு புகுந்து அங்குள்ள பயிர்களை நாசம் செய்தது.

கூட்டத்தில் வந்த ஆண் யானை ஒன்று விவசாய நிலத்தின் அருகே இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் உரசியது. அப்போது யானையின் தந்தம் மின்சார ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் யானை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

விவசாய நிலத்திற்கு சென்ற அப்பகுதி மக்கள் யானை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சித்தூர் வனசரக அலுவலர் சிவகுமார் வனவர்கள் சைதன்யா, அனில் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த யானையை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News