இந்தியா

மாடுகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை...

Published On 2023-03-27 09:40 GMT   |   Update On 2023-03-27 09:40 GMT
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 கிராமங்களில் மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளித்து ஓய்வு வழங்கப்படுகிறது.
  • விடுமுறை நாளில் மாடுகளிடம் வேலை வாங்கினால் அது பாவமாக கருதப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் மாடுகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது. இந்த நடைமுறை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு காரணமும் உள்ளது.

மாடுகளை தொடர்ந்து நாள்தோறும் வேலை வாங்குவதால் அவை சோர்வடைகின்றன. அப்படி தினமும் வேலை வாங்கப்பட்ட காளை மாடு ஒன்று வயலில் உழுது கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்து இறந்தது.

மாடுகளுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்குவதால் தான் இப்படியொரு சம்பவம் நடந்து விட்டதாக கருதி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பசுமாடு, காளை மாடு, எருமை மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுத்தனர்.

இந்த பழக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 கிராமங்களில் மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளித்து ஓய்வு வழங்கப்படுகிறது.

அன்று மாடுகளிடம் எந்த வேலையும் வாங்குவதில்லை. குறிப்பாக பசுக்கள், எருமைகளிடம் பால் கூட கறப்பதில்லை. இந்த பழக்கம் 24 கிராமங்களில் உள்ள அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது.

விடுமுறை நாளில் மாடுகளிடம் வேலை வாங்கினால் அது பாவமாக கருதப்படுகிறது. இந்த கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் வியாழக்கிழமை தோறும் மாடுகளுக்கு விடுமுறை அளிக்கிறார்கள். மற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாடுகளிடம் வேலை வாங்குவதில்லை.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், "மாடுகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை கொடுத்து ஓய்வு வழங்குவதால் அவை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளன. இது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. மாடு வளர்ப்போர் அனைவருமே இதை பின்பற்றி வருகிறார்கள்" என்றனர்.

Tags:    

Similar News