இந்தியா

7 மாதங்களாக சுய நினைவு இல்லாமல் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

Published On 2022-10-28 10:17 GMT   |   Update On 2022-10-28 10:18 GMT
  • கடந்த 7 மாதங்களாக பெண் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார்.
  • வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனம் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் கணவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரது மனைவிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர் சுயநினைவு இழந்தார்.

உடனடியாக அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனையில் அந்த பெண் 40 நாள் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. ஹெல்மெட் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆழ்ந்த கோமா நிலைக்கு அவர் சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு நினைவு திரும்புமா என்பதை உறுதியாக செல்ல இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தகவலையும் தெரிவித்தனர்.

சுய நினைவு இல்லாமல் இருக்கும் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவை கலைக்க வேண்டுமானால் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை வளர்க்க கணவர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சுய நினைவு இழந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி அறையில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

கடந்த 7 மாதங்களாக அவர் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார். அதே சமயத்தில் வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை பெற்ற அந்த பெண் சுய நினைவு இல்லாமலேயே அறுவை சிகிச்சை இன்றி இயல்பான முறையில் குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

23 வயதாகும் அந்த பெண் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார். குழந்தை பெற்ற சமயத்தில் அவரது கண்கள் திறந்தன. ஆனால் அந்த பெண் பேசவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News