இந்தியா

இந்தியாவில் தாக்குதல் அதிகரிக்கலாம்- மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2022-10-29 12:13 IST   |   Update On 2022-10-29 12:24:00 IST
  • இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
  • எப்.ஏ.டி.எப்.-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

மும்பை:

சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் கண்காணிப்பு பணிகளை எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு சேகரிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் சேர்க்கும்.

இந்த பட்டியலில் இருக்கும் நாடுகள் சர்வதேச அளவில் நிதி உதவிகளை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் கிரே பட்டியலில் இருந்தது. சமீபத்தில் இந்த பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.

இந்நிலையில் எப்.ஏ.டி.எப்-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் 2 நாள் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பங்கை அதிகாரிகள் எடுத்து கூறினர்.

லஷ்கர் அமைப்பின் முக்கிய தலைவர் சஜித் மிர் பேசிய ஆடியோ கிளிப்பை போட்டு காட்டினர். அதில், அவர் மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியது உறுதியாகி இருந்தது. மிர் இறந்துவிட்டதாக பாகிஸ்தான் பல ஆண்டுகளாக கூறி வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானிய அதிகாரிகளால் சஜித் மிர் கைது செய்யப்பட்டதையும், அதிகாரிகள் பயங்கர எதிர்ப்பு குழுவிடம் எடுத்துரைத்தனர்.

மேலும் இந்த கூட்டத்தில் மத்திய புலனாய்வு துறையின் அதிகாரி ஷபி ரிஸ்வி பேசுகையில், 2018-ம் ஆண்டின் மத்தியில் எல்லையில் 600 பயங்கரவாத தளங்கள் இருந்தன. அவை எப்.ஏ.டி.எப். பட்டியலின் போது 75 சதவீதம் குறைந்துள்ளன. இது மிக முக்கியமான வெற்றியாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.

அதே நேரம் எப்.ஏ.டி.எப்.-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

Similar News