இந்தியா

திருப்பதியில் நாளை வருடாந்திர புஷ்ப யாகம்: 7 டன் பூக்களால் 4 மணிநேரம் நடைபெறும்

Published On 2023-11-18 09:41 IST   |   Update On 2023-11-18 09:41:00 IST
  • திருப்பதியில் நேற்று 67,140 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,870 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
  • நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

புஷ்ப யாகத்தின்போது கோவிலில் ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி உற்சவர்களுக்கு சம்பங்கி மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

இதில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.

இதற்காக 7 டன் வரை பலவிதமான பூக்கள் கொண்டுவரப்படுகிறது. மாலையில் சகஸ்ரதீப அலங்கார சேவை முடிந்து ஏழுமலையான் கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

இதையொட்டி இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது.

இன்று சகஸ்ரதீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பஞ்சமி தீர்த்தத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது.

மேலும், புஷ்ப யாகத்தையொட்டி நாளை (ஞாயிறு) கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளது. தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 67,140 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,870 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.4.01 கோடி வசூலானது.

நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News