இந்தியா

கேரளாவில் மீண்டும் பெண் மந்திரவாதி வீட்டில் சிறை வைக்கப்பட்ட சிறுவன் உள்பட 3 பேர் மீட்பு- நரபலி கொடுக்க கடத்தப்பட்டார்களா?

Published On 2023-05-04 09:28 GMT   |   Update On 2023-05-04 09:28 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.
  • வீட்டில் ஒரு சிறுவனை சித்ரவதை செய்ததாக கூறி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள எலத்தூணரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலி மந்திரவாதி ஷபி, ஆயுர்வேத டாக்டர் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீட்டில் இருந்து நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பத்தினம் திட்டா மாவட்டம் மலையாளப்புழா என்ற இடத்தில் சித்து வேலைகளில் ஈடுபட்டு வந்த பெண் மந்திரவாதி ஷோபனா என்பவரும் சிக்கினார்.

இவர் வீட்டில் ஒரு சிறுவனை சித்ரவதை செய்ததாக கூறி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்த அவர் மீண்டும் அதுபோன்ற மந்திரவாத செயல்களை செய்து வந்தார்.

இந்த நிலையில் பெண் மந்திரவாதி ஷோபனா வீட்டில் இருந்து நேற்று காலை சிறுவன் ஒருவன் அழும் சத்தம் கேட்டது. இது பற்றி அக்கம் பக்கத்தினர், அந்த பகுதியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் பெண் மந்திரவாதி வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு அறையில் சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனிடம் வாலிபர்கள் விசாரித்த போது தன்னையும், தனது பெற்றோரையும், பெண் மந்திரவாதி அடைத்து வைத்திருப்பதாக கூறினான்.

உடனே வாலிபர் சங்க நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பெண் மந்திரவாதி ஷோபனா வீட்டுக்குள் அதிரடியாக சென்றனர். அங்குள்ள அறைகளை சோதனை செய்தனர். இதில் ஒரு அறையில் அந்த சிறுவனும், அவனது பெற்றோரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் 3 பேரையும் மீட்ட போலீசார், அவர்கள் எதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என விசாரித்தனர். இது பற்றி சிறுவனின் தந்தை கூறும்போது, ஒரு மோசடி வழக்கில் என்னை போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் இருந்து வெளியே வர பெண் மந்திரவாதியை சந்தித்து பேச வந்தேன். இதற்காக ஒரு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

அந்த பூஜைக்கான பணத்தை நான் கொடுக்க வில்லை. எனவே என்னையும், எனது மனைவி மற்றும் மகனை அவர் ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டார். கடந்த 4 நாட்களாக இங்குதான் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம், என்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவனை நரபலி கொடுக்க பெண் மந்திரவாதி திட்டமிட்டாரா? என்றும் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து பெண் மந்திரவாதி ஷோபனா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News