இந்தியா

கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இன்று 245 ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2022-08-21 04:09 GMT   |   Update On 2022-08-21 04:09 GMT
  • குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்ள கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • ஆவணி முதல் ஞாயிறான இன்று கோவிலில் திருமணம் செய்து கொள்ள ஏராளமான ஜோடிகள் முன்பதிவு செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

இக்கோவிலில் திருமணம் செய்வது தம்பதிகளுக்கு நீடித்த வாழ்க்கையையும், சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனால் முகூர்த்த நாட்களில் இங்கு கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்ள கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்படி ஆவணி முதல் ஞாயிறான இன்று கோவிலில் திருமணம் செய்து கொள்ள ஏராளமான ஜோடிகள் முன்பதிவு செய்தனர்.

200-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்ததால் கோவில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்வதை நிறுத்தியது.

இதனை கண்டித்து பக்தர்கள் சிலர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு, திருமணம் செய்ய விரும்புவோர் அனைவருக்கும் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து கோவில் நிர்வாகம் கோவிலில் இன்று திருமணம் செய்து கொள்ள கூடுதல் ஏற்பாடுகளை செய்தது. மேலும் ஏற்கனவே இருந்த திருமண மண்டபங்களுடன் கூடுதலாக மண்டபங்களுக்கும் ஏற்பாடு செய்தது.

கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடுகளை தொடர்ந்து இன்று ஒரே நாளில் குருவாயூர் கோவிலில் 245 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு வந்த ஜோடிகளுடன் அவர்களின் உறவினர்கள் மற்றும் புகைப்படகாரர் என 20 பேருக்கு மட்டுமே மண்டபத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் கோவிலுக்கு வெளியே காத்திருந்தனர். இன்று காலை முதலே கோவிலை சுற்றி திருமண ஜோடிகளின் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News