இந்தியா

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவில் தமிழ்நாடு 2-வது இடம்

Published On 2022-09-02 02:13 GMT   |   Update On 2022-09-02 02:13 GMT
  • உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.
  • பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்குகள்தான் அதிகம்.

புதுடெல்லி :

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் 'இந்தியாவில் குற்றங்கள்-2021' என்ற புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு, தேசத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக 5 ஆயிரத்து 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது, நாள் ஒன்றுக்கு சராசரியாக 14 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இது, கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட குறைவாகும்.

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில், தேசத்துரோக வழக்குகள், அரசாங்க ரகசிய சட்ட வழக்குகள், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட (உபா) வழக்குகள், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்குகள் ஆகியவை அடங்கும்.

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில், உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 1,862 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 654 வழக்குகளுடன் தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்துள்ளது. அசாம், காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்குகள்தான் அதிகம். அத்தகைய 4 ஆயிரத்து 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசத்துரோக வழக்குகள் 76-ம், 'உபா' சட்ட வழக்குகள் 814-ம், அரசாங்க ரகசிய சட்ட வழக்குகள் 55-ம் பதிவாகி உள்ளன. அதிகமான தேசத்துரோக வழக்குகள் ஆந்திராவிலும் (29 வழக்குகள்), அதிகமான 'உபா' சட்ட வழக்குகள் மணிப்பூரிலும் (157) பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுபோக, முந்தைய ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 8 ஆயிரத்து 600 வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளது.

Tags:    

Similar News