முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் கல்மாடி காலமானார்
- சுரேஷ் கல்மாடி அரசியல் மற்றும் விளையாட்டுகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஆவார்.
- காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைதாகி விடுதலை ஆனார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுரேஷ் கல்மாடி நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
புனேயில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் கல்மாடி இன்று அதிகாலை 3.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.
அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுரேஷ் கல்மாடியின் உடல் புனேயின் எரண்ட்வானேயில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை நவிபெத்தில் உள்ள வை குந்த் ஸ்மஷன் பூமியில் இறுதி சடங்கு நடக்கிறது.
சுரேஷ் கல்மாடி அரசியல் மற்றும் விளையாட்டுகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஆவார். அவர் 1944-ம் ஆண்டு மே 1-ந் தேதி புனேயில் பிறந்தார். இந்திய விமான படையில் 1964 முதல் 1972 வரை பணியாற்றினார். 1974-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அரசியலில் நுழைந்தார்.
சுரேஷ் கல்மாடி 1995 முதல் 1996-ம் ஆண்டுகளுக்கு இடையிலான காங்கிரஸ் மந்திரி சபையில் ரெயில்வே இணை மந்திரியாக பணியாற்றினார்.
அவர் 3 முறை பாராளுமன்ற மக்களவை (1996, 2004, 2009) எம்.பி.யாக இருந்தார். 1982, 1988, 1994, 1998 ஆகிய 4 தடவை மேல் சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுரேஷ் கல்மாடி இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர் ஆவார். 1996 முதல் 2011 வரை 15 ஆண்டுகள் அவர் அந்த பொறுப்பில் பணியாற்றினார்.
அவர் ஆசிய தடகள சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தார். சர்வதேச தடகள சம்மேளனத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்திய விளையாட்டு துறையில் வலிமை மிக்க நிர்வாகியாக இருந்தவர் ஆவார். அவரது தலைமையின் கீழ் 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைதாகி விடுதலை ஆனார். இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
சுரேஷ் கல்மாடிக்கு மனைவி, மகன், மருமகள், 2 மகள்கள், மருமகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.