இந்தியா

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு

Published On 2022-11-01 06:55 GMT   |   Update On 2022-11-01 06:55 GMT
  • கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
  • கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு, ‘லகு’ தரிசன ஏற்பாடு செய்தது.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தெலுங்கு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையை சோமவாரமாக பக்தர்கள் அனுசரித்தனர். சோமவாரம் சிவபெருமானை வழிபட உகந்த நாள் என்பதால் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பல பக்தர்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் தீபம் ஏற்ற கோவில் வளாகத்தில் நான்கு பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு, 'லகு' தரிசன ஏற்பாடு செய்தது.

கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சன்னதி அருகில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் மாதிரி லிங்கத்தை ஏற்பாடு செய்து வேதபண்டிதர்கள், அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனை காண்பித்தனர்.

நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News