இந்தியா

குற்றவாளிகளை கட்சியில் சேர்த்து பதவி கொடுப்பவர்களும் ராஜினாமா செய்ய வேண்டுமா? அமித் ஷாவிடம் கெஜ்ரிவால் வினா!

Published On 2025-08-26 05:20 IST   |   Update On 2025-08-26 05:20:00 IST
  • பொய் வழக்குப் பதிவு செய்தவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்?
  • நான் 160 நாட்கள் சிறையில் இருந்தே அரசாங்கத்தை நடத்தினேன்.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த தகுதி நீக்க மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.

சிறையில் இருந்து யாரும் ஆட்சி செய்ய கூடாது என்பதே இதன் நோக்கம் என  அமித் ஷா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 

இந்நிலையில் இந்த மசோதா குறித்து அமித் ஷாவிடம் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பிய கேள்வி கவனம் பெற்று வருகிறது.

கெஜ்ரிவால் தனது எக்ஸ் பதிவில், "கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை, ஊழல் தலைவர்களை தங்கள் கட்சியில் சேர்த்துக்கொண்டு, அவர்களின் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, அவர்களை அமைச்சராகவோ, துணை முதல்வராகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆக்கினால், அத்தகைய அமைச்சர், பிரதமர் தனது பதவியை விட்டு விலகுவார்களா? அத்தகைய நபர் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்?

ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மற்றொரு பதவில், "அரசியல் சதித்திட்டத்தின் கீழ் ஒரு பொய் வழக்கில் மத்திய அரசு என்னை சிறைக்கு அனுப்பியபோது, நான் 160 நாட்கள் சிறையில் இருந்தே அரசாங்கத்தை நடத்தினேன்.

கடந்த ஏழு மாதங்களில், டெல்லியின் பாஜக அரசாங்கம் டெல்லியை மிகவும் மோசமாக்கியுள்ளது. இன்று டெல்லி மக்கள் சிறையில் அடைக்கப்பட்ட அந்த அரசாங்கத்தை மிஸ் செய்கிறார்கள்.

குறைந்தபட்சம் சிறை அரசாங்கத்தின் போது, மின்வெட்டு இல்லை, தண்ணீர் கிடைத்தது, மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் கிடைத்தன, இலவச பரிசோதனைகள் நடத்தப்பட்டன, ஒரு மழைக்குப் பிறகு டெல்லி இவ்வளவு மோசமான நிலையில் இல்லை, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகச் செயல்படவும், குண்டர்கள் ஆதிக்கமும் அனுமதிக்கப்படவில்ல" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜனவரியில் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யபட்டு திகார் சிறையில் இருந்தபடி டெல்லி முதலமைச்சராக செயல்பட்டார். செப்டம்பரில் ஜாமீன் பெற்று வெளிவந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

Similar News