null
சபரிமலையில் மண்டல பூஜைக்காக 16-ந்தேதி நடை திறப்பு: பம்பை உள்பட 5 இடங்களில் 'ஸ்பாட் புக்கிங்' மையங்கள்
- சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- மையங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து, அன்றைய தினமே சாமி தரிசனம் செய்யலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்திலும் அந்த முறை அமல்படுத்தப்படுகிறது.
தினமும் ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70ஆயிரம் பேருக்கும், ஸ்பாட் புக்கிங் (உடனடி முன்பதிவு) மூலமாக 20 ஆயிரம் பேருக்கும் என தினமும் 90 ஆயிரம் பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
மண்டல பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (1-ந்தேதி) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. sabarimalaonline.org என்ற இணையதளம் முலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
'ஸ்பாட் புக்கிங்' மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார், சன்னிதானம் ஆகிய 5 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த மையங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து, அன்றைய தினமே சாமி தரிசனம் செய்யலாம்.
மேலும் இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தால், அவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. அதாவது கடந்த காலத்தில் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் விபத்தில் உயிரிழக்கும் ஐயப்ப பக்தர்களின் குடும்பத்துக்கு ரூ5.லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.
அது இந்த ஆண்டுமாநில எல்லைக்குள் எந்த பகுதியில் விபத்து நடந்து, அதில் மரணம் அடையும் ஐயப்ப பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் விபத்து காப்பீடு வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மேலும் இறந்தவர்களின் உடலை அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்ல கேரள மாநிலத்திற்குள் ரூ.30 ஆயிரமும், வெளி மாநில பக்தர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமின்றி மலையேற்றத்தின்போது மரணம் ஏற்பட்டால் ஐயப்ப பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து முன்பதிவு செய்யப்படும் போது ரூ.5 பெறப்படுகிறது.