இந்தியா

பீகார் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது குறித்து மனம் திறந்து பேசிய பிரசாந்த் கிஷோர்

Published On 2025-11-18 12:50 IST   |   Update On 2025-11-18 12:50:00 IST
  • பீகாரில் ஜன்சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
  • போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது.

அதற்கு ஏற்ப பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். ஆனால் அவர்களில் 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் ஜன்சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.

போட்டியிட்ட 238 தொகுதிகளில் அனைத்திலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதோடு 236 தொகுதிகளில் டெபாசிட்டும் பறி கொடுத்தனர்.

இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், "நாங்கள் மேற்கொண்ட நேர்மையான முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது. இதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எங்களால் இந்த சிஸ்டமை மாற்றமுடியவில்லை என்பதை விட அதிகாரத்தில் கூட எங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால் பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக குறிப்பிட்ட பங்கைக் கொண்டிருந்தோம். மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதில் இருந்தே நாங்கள் எங்கோ வறு இருந்திருக்கிறோம் என்பது புரிகிறது.

மக்கள் எங்கள் மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால், அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது தான். பீகார் மக்களின் நம்பிக்கையை என்னால் வெல்ல முடியவில்லை என்பதற்கு நான் 100% பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News