இந்தியா

51,000 பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி

Published On 2023-11-30 11:27 GMT   |   Update On 2023-11-30 11:27 GMT
  • ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் மூலம் மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படுகிறது.

புதுடெல்லி:

மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது நாடு முழுவதும் 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த விழாவில் மத்திய மந்திரிகள் இந்த ஆணைகளை வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாவது கட்டமாக 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மேலும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டில் நாடு எங்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பையும், அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பையும் வழங்கியபோது, முதலில் 'பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை' என்ற தாரக மந்திரத்துடன் முன்னேற ஆரம்பித்தோம்.

திட்டங்களின் பலனை ஒருபோதும் பெறாத மக்களுக்கு அரசாங்கமே சென்றடைந்தது. பல தசாப்தங்களாக அரசிடம் இருந்து எந்த வசதியும் பெறாதவர்களின் வாழ்க்கையை மாற்ற முயற்சித்து வருகிறோம்.

அரசாங்கத்தின் சிந்தனை மற்றும் பணி நெறிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் நாட்டில் நம்பமுடியாத மாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதிகாரத்துவமும் ஒன்றுதான், மக்களும் ஒன்றுதான். இன்னும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதும், எல்லாமே மாறத் தொடங்கி இந்தியா சுறுசுறுப்பாக முன்னேறியது என தெரிவித்தார்.

ரெயில்வே அமைச்சகம், அஞ்சல்துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பவர்களுக்கு காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.

புதிதாக பணி நியமனம் பெறுபவர்கள், (https://portal.igotkarmayogi.gov.in/) எனும் இணையதளம் வழியாக, 800-க்கும் மேற்பட்ட மின்-கற்றல் படிப்புகளை படித்து தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News