இந்தியா

நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

Published On 2024-01-12 08:40 IST   |   Update On 2024-01-12 08:40:00 IST
  • சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.
  • ‘பாரத் ரத்னம்’ என்ற நகை தொழில் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

மும்பை:

மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இந்த பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது.

நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி 2018-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி தொடங்கியது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.

ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமாக வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது.

மும்பை- நவிமும்பை இடையே 15 கி.மீ. பயண தூரத்தையும், 1 முதல் 1½ மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக பயண நேரத்தையும் குறைக்கிறது.

இந்த பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

இந்த பிரமாண்ட பாலத்தை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவை உள்ளிட்ட வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

மதியம் 12.15 மணிக்கு நாசிக் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். பின்னர் மும்பை வரும் அவர் பிற்பகல் 3.30 மணிக்கு கடல்வழி பாலத்தை திறந்து வைக்கிறார்.

இதையடுத்து நவிமும்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். மாலை 4.15 மணியளவில் இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாநிலத்தில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடியிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் ரூ.8 ஆயிரத்து 700 கோடி மதிப்பீட்டில் மும்பை எல்ேலா கேட் முதல் மெரின் டிரைவ் வரை 9.2 கி.மீ. தூரம் அமைக்கப்படும் சுரங்கப்பாதைக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த சுரங்கப்பாதை கிழக்கு புறநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த சுரங்க்பாதை மும்பை வளர்ச்சிக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது. 'பாரத் ரத்னம்' என்ற நகை தொழில் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் முடிவுற்ற மற்றும் தொடங்கி வைக்கும் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும்.

விழாக்களில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நவிமும்பை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகையையொட்டி மும்பை, நவிமும்பை மற்றும் நாசிக் நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

Tags:    

Similar News