நடைபயிற்சியின்போது நாய்கள் துரத்தியதால் கீழே விழுந்த தொழில் அதிபர் மரணம்
- பாக் பக்ரி நிறுவனம் தேயிலை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது.
- இளம் வயதில் தொழில் அதிபர் இறந்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சூரத்:
குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பாக் பக்ரி நிறுவனம் தேயிலை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. உள்நாட்டிலும் தேயிலை விற்பனை செய்து வருகிறது.
இந்த குழுமத்தின் செயல் இயக்குனராக இருந்து வந்தவர் பராக் தேசாய் (வயது 49). மிகப்பெரிய கோடீசுவரரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டு அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் அவரை சுற்றி வளைத்தது. இதனால் பயந்து போன அவர் ஓட்டம் பிடித்தார். இருந்த போதிலும் நாய்களும் அவரை துரத்தியது. இதில் பராக் தேசாய் கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இளம் வயதில் தொழில் அதிபர் இறந்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.