மணிப்பூர் சட்டசபையை ஆகஸ்ட் 21-ந்தேதி கூட்டுங்கள்: கவர்னருக்கு மந்திரி சபை பரிந்துரை
- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
- மூன்று மாதங்களுக்குமேல் ஆன நிலையிலும் வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று முன்தினம் ஒரு பகுதியில் கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்புப்படை செக்போஸ்ட் சூறையாடப்பட்டு, ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதற்கிடையே கடந்த மாதம் வெளியான இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. வன்முறைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், மணிப்பூர் முதல்வருக்கு ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. இதனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் நேற்று மணிப்பூர் மாநில மந்திரி சபை கூட்டம் நடந்தது. அப்போது சட்டசபையை ஆகஸ்ட் 21-ந்தேதி கூட்ட கவர்னர் அனுசுயா உய்கே-வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மணிப்பூரில் இரு பிரிவனருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துன்ளர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஸ்தம்பித்துள்ளது. விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். மக்களவையில் அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் வருகிற 8-ந்தேதி நடைபெற இருக்கிறது.