இந்தியா

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க தடை- ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

Published On 2022-07-01 07:11 GMT   |   Update On 2022-07-01 09:55 GMT
  • நாளை மற்றும் நாளை மறுநாள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
  • சிவசேனா தலைவர் சுனில் பிரபு சுப்ரீம் கோர்ட்டில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்து இருந்தார்.

புதுடெல்லி:

மகாராஷ்டிரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய முதல்-மந்திரியாக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்.

இதையடுத்து அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாளையும் (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை ) சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும் இக்கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்து உள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 39 எம்.எல்.ஏக்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில் சிவசேனா அதிருப்தி எம்,எல்.ஏக்களுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் இப்போது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. இதனால் இந்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கை விசாரித்து முடிக்கும் வரை அவர்களை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே சிவசேனா தலைவர் சுனில் பிரபு சுப்ரீம் கோர்ட்டில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News