இந்தியா

முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Published On 2025-05-06 15:42 IST   |   Update On 2025-05-06 15:42:00 IST
  • தமிழக அரசை பொறுத்தவரைக்கும் அணையை பராமரிப்பதற்கு விருப்பம் காட்டவில்லை- கேரளா அரசு வாதம்.
  • ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு, நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெறுகிறது- தமிழக அரசு வாதம்.

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்சநீதிமன்றம் "முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும். புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை என்பது வேறு விவகாரம். தற்போதைய அணையை பராமரிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

கேரள அரசு சார்பில் "தமிழக அரசை பொறுத்தவரைக்கும் அணையை பராமரிப்பதற்கு விருப்பம் காட்டவில்லை. மாறாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவே தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது" என வாதம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு உச்சநீதிமன்றம் "இதை பொதுவான குற்றச்சாட்டாகவே வைக்கிறீர்கள். ஆனால் இவ்வாறு தமிழக அரசு எங்கு தெரிவித்துள்ளது எனக் காட்டுங்கள்" என திருப்பி கேள்வி எழுப்பியது.

"தொடர்ச்சியாக இவ்விவகாரம் நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு, நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெறுகிறது. எனினும், அதை செயல்படுத்த கேரளா முட்டுக்கட்டை போடுகிறது" என தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரள அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Tags:    

Similar News