பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதா: பிரசாந்த் கிஷோர் சொன்னது இதுதான்
- மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்தனர்.
பாட்னா:
பாராளுமன்ற மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அமித்ஷா.
அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களைக் கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால் மக்களவை அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதை உருவாக்கியவர்களும், நாட்டின் நிறுவனர்களும், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஊழல்வாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைக்குப் பிறகும் அவர்கள் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
ஒரு தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அவர்களால் சிறையில் இருந்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் இந்த மசோதா நல்லதென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.