எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 120 பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்: இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பு
- பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
- பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-ெதாய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய 2 பயங்கரவாத இயக்கங்களும் ஆட்சியாளர்கள் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவமும் இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து பயிற்சியும் கொடுத்து வருகிறது.
பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இந்தியாவில் ஊடுருவ செய்து நாச வேலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி திட்டமும் வகுத்து கொடுக்கிறது. சமீபத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதலும், அப்படித்தான் நடந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இவ்வளவு அடிபட்டும் திருந்தாத பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு தற்போது காஷ்மீர் எல்லை அருகே கொண்டுவந்து நிறுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் 120 பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் பதுங்கியிருப்பதை இந்திய ராணுவம் உறுதிபடுத்தி உள்ளது. அவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.