இந்தியா

ஓரினச்சேர்க்கை இளம் பெண்களை பிரிக்கக் கூடாது: பெற்றோருக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2024-12-18 11:00 IST   |   Update On 2024-12-18 11:15:00 IST
  • இளம்பெண் தெலுங்கானா ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார்.
  • ஓரினச்சேர்க்கை ஜோடி ஒன்றாக வாழ கோர்ட்டு அனுமதி வழங்கியது.

திருப்பதி:

விஜயவாடாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கும் ஓரினச்சேர்க்கை ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் 27 வயது இளம் பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் இளம்பெண்ணை அவருடைய ஜோடியிடம் இருந்து பிரித்து வீட்டில் தனியாக அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த 25 வயது இளம்பெண் தெலுங்கானா ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார்.

தனது 27 வயது துணையை அவரது தந்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு பெண்ணின் தந்தைக்கு ஐகோர்ட்டு முன்னதாக நோட்டீஸ் அனுப்பியது. அந்த பெண்ணை தங்கள் முன் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 2 பெண்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர், அவர்கள் ஒன்றாக வாழ விரும்புவதை மீண்டும் வலியுறுத்தினர்.

ஓரினச்சேர்க்கை ஜோடி ஒன்றாக வாழ கோர்ட்டு அனுமதி வழங்கியது. அவர்களின் வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று பெற்றோருக்கு உத்தரவிட்டது.

இரு பெண்களும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்தின்படி வாழ சுதந்திரம் உள்ளது. தேவைப்பட்டால் தம்பதியருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

Similar News