இந்தியா

டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரெயில்-விமான சேவை கடும் பாதிப்பு

Published On 2024-01-30 14:42 IST   |   Update On 2024-01-30 14:42:00 IST
  • தலைநகர் டெல்லியில் தான் அதிகளவு பனிமூட்டம் காணப்படுகிறது.
  • கடும் பனியால் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி:

டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான் அதிகளவு பனிமூட்டம் காணப்படுகிறது. இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாக உள்ளது.

இதனால் எதிரில் யார் நிற்கிறார்கள் என்பது கூட தெரியாமல் அடர்த்தியான பனிமூட்டம் டெல்லி நகரை சூழ்ந்தது. இதன்காரணமாக ரெயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் விமானங்களால் தரை இறங்க முடியவில்லை. புறப்பட்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

கடும் பனியால் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 108 விமானங்கள் தாமதமாக தரை இறங்கியது. விமான சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். விமான நிலையத்தில் அவர்கள் மணிக்கணக்கில் காத்து இருந்தனர். விமான சேவை குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

டெல்லிக்கு வரும் ரெயில்களும் பல மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. மும்பை ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக டெல்லிக்கு சென்று சேர்ந்தது.

Tags:    

Similar News